வேகமெடுக்கும் ஜே.என். 1 வகை கொரோனா பரவல்- 24 மணிநேரத்தில் 760 பேருக்கு தொற்று உறுதி
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஒமிக்ரான் போன்ற சில கொரோனா திரிபுகளும் பரவிய நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனாவின் புதிய வகையான ஜே.என். 1 வகை கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த புதிய வகை வைரஸ் தொற்று வேகமாக பரவுவதோடு, மனிதர்களின் நோய் தடுப்பு ஆற்றலையும் ஊடுருவி பாதிப்படைய செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இதுவரை கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழப்பு
இந்நிலையில், இந்தியா முழுவதும் கடந்த 24மணிநேரத்தில் 760 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இன்று(ஜன.,4)காலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேப்போல் உயிரிழந்தவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையானது தற்போது 4,423ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, நேற்று(ஜன.,3)கொரோனாவால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்றதில் 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், நோயிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 4.4 கோடியாக உயர்ந்த நிலையில், நோய் பாதிப்புற்று மீண்டு வந்தவர்கள் விகிதம் 98.81%மாக பதிவாகியுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.