Page Loader
விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல்

விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல்

எழுதியவர் Sindhuja SM
Feb 14, 2024
10:56 am

செய்தி முன்னோட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நேற்று இரவு போராட்டத்தை நிறுத்திவிட்டு இன்று மீண்டும் அதை தொடங்கியுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதத்தை கோரி மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கில், 'டெல்லி சலோ' என்ற பேரணியை நேற்று விவசாயிகள் தொடங்கினர். விவசாயிகளின் போராட்டத்திற்காக பஞ்சாபிலிருந்து மட்டும் 1,500 டிராக்டர்கள் மற்றும் 500 வாகனங்கள் அணிதிரட்டப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனங்களில் ஆறு மாதத்திற்கான உணவு, ரேஷன் பொருட்கள் மற்றும் தளவாடங்கள் உள்ளதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது. நேற்று இரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விவசாயிகளின் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

டெல்லி

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அரசாங்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். MSP, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளைத் தவிர, அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை அரசாங்கம் முன்பே ஏற்றுக்கொண்டுவிட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதத்தை கோருவதே தற்போது அவர்களது முக்கிய குறிக்கோளாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கம் நேற்று மேலும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் தங்கள் நேரத்தை அரசாங்கம் வீணடிப்பதாகவும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று காலை டெல்லி எல்லையில் ஆரம்பித்திருக்கும் போரட்டத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.