தடுப்புகளை உடைத்து ஹரியானா-பஞ்சாப் எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள்: கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு
இன்று 'டெல்லி சலோ' போராட்டப் பேரணியைத் தொடங்கி, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவை நெருங்கும் போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். நேற்று இரவு விவசாயிகள் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையேயான முக்கியமான கூட்டம் எந்த முடிவும் இல்லாமல் முடிவடைந்ததை அடுத்து, 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இன்று பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதத்தை கோரி மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கில், 'டெல்லி சலோ' என்ற பேரணியை இன்று விவசாயிகள் தொடங்கினர்.
போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு
விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு, டெல்லி காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது. ஒன்றுகூடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து, ஒழுங்கை பராமரிக்க எல்லைகளை பலப்படுத்தியுள்ளது. தேசிய தலைநகரை நோக்கி பெரிய அளவிலான விவசாயிகளின் அணிவகுப்பால் டெல்லியை சுற்றியுள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், காஜிபூர் மற்றும் சில்லா எல்லைகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்பட்டன. மேலும், பஞ்சாப்-ஹரியானா ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் டிராக்டர்களால் சிமென்ட் தடுப்புகளை உடைக்க முயன்றதால் பதற்றம் அதிகரித்தது. அதனால், போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ட்ரோன்களைப் பயன்படுத்தி சில கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.