'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு
2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட MSP குழுவிற்கான பிரதிநிதிகளை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்று மத்திய அரசு ஒரு குற்றசாட்டை முன்வைத்துள்ளது. டெல்லியில் இன்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் "டெல்லி சலோ" என்ற மாபெரும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் தங்கள் பயிர்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை(எம்எஸ்பி) நிர்ணயிக்க ஒரு சட்டத்தை இயற்ற கோரி இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து பேசியிருக்கும் மத்திய அரசு, ஜூலை 2022 இல் MSP சட்டத்தை திறம்பட இயற்ற அரசாங்கம் உருவாக்கிய குழுவிற்கான பிரதிநிதிகளை சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ளது.
2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு
பிரதமர் மோடியை மேற்கோள் காட்டி ஜூலை-12, 2022 அன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. "பூஜ்ஜிய பட்ஜெட் அடிப்படையிலான விவசாயத்தை ஊக்குவிக்கவும், நாட்டின் மாறிவரும் தேவைகளை மனதில் கொண்டு பயிர் முறைகளை மாற்றவும், MSPஐ மிகவும் பயனுள்ளதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்ற ஒரு குழு அமைக்கப்படும்." என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. அந்த குழுவில், மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த குழுவிற்கான 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்ட்டனர். மேலும், விவசாய முன்னாள் செயலாளர் சஞ்சய்அகர்வால் அந்த குழுவுக்கான தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த குழுவில் சேர்க்கப்பட வேண்டிய விவசாய உறுப்பினர்களை சம்யுக்த் கிசான் மோர்ச்சா பரிந்துரைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.