தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்?
தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் 1 கோடி பெண்களுக்கும் மேல் பயனடைவதாக கூறப்படும் நிலையில் இத்திட்டத்தினை பெறும் நோக்கில் குடும்ப அட்டைகள் இல்லாத பலரும் புது குடும்ப அட்டைகளை கோரி விண்ணப்பிக்க துவங்கியதாக தெரிகிறது. அதன்படி இதற்காக விண்ணப்பித்த உரிய தகுதிப்பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு 4 மாதங்கள் ஆகியும் குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து பல புகார்களும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
'உரிய விசாரணைகள் மேற்கொண்ட பின்னரே குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்படும்' - அலுவலர்கள்
அவர்கள் கூறியதாவது, 'கடந்த ஜூலை மாதம் முதல் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டது. அதிலிருந்து இப்பொழுதுவரை தமிழகத்தில் யாருக்கும் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை' என்று கூறியுள்ளனர். மேலும், 'ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்லாயிர கணக்கானோர் புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில் 4 மாதங்களாக குடும்ப அட்டைகள் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது'என்றும், 'வரும் காலங்களில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கும் பலர் விண்ணப்பிக்க நேரிடும் என்பதால் உரிய விசாரணைகள் மேற்கொண்ட பின்னரே குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்படும்' என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். 'இன்னும் குடும்ப அட்டைகள் அச்சிடும் பணிகள் துவங்காமல் நிலுவையில் இருக்கும் பட்சத்தில், தமிழக அரசு இதுகுறித்த தெளிவான அறிக்கையினை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.