குஜராத்தில் போலி டோல் பிளாசா அமைத்து வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்த ருசிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது
குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் போலியான டோல் பிளாசா ஒன்று கடந்த 1.5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள். பாமன்போர் மற்றும் கட்ச் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இந்த போலியான தனியார் டோல் பிளாசாவை அமைத்திருக்கின்றனர். மேற்கூறிய நெடுஞ்சாலையில் இருந்து தனியார் நிலத்தில் தனியாக ஒரு சாலை அமைத்து அந்த சாலையில் இந்த போலி டோல் பிளாசாவை அமைத்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வமான வகாசியா டோல் பிளாசா மூலம் செல்லும் வாகனங்களை இந்தப் போலி டோல் பிளாசா வழியாக செல்லும் வகையில் திசை திருப்பியிருக்கின்றனர். அதிகாரப்பூர்வ டோல் பிளாசா கட்டணத்தில் பாதி கட்டணம் மட்டுமே வசூலித்ததால், வாகன ஓட்டிகளும் இந்த போலி டோல் பிளாசாவின் வழியாக வாகனங்களை இயக்கியிருக்கின்றனர்.
கண்டறியப்பட்ட போலி டோல் பிளாசா:
கடந்த 1.5 ஆண்டுளாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளிடமிருந்து சட்டத்திற்குப் புறம்பாக போலி டோல் பிளாசா மூலம் கட்டணம் வசூலித்திருக்கின்றனர். இந்த போலி டோல் பிளாசா அமைந்திருக்கும் இடமானது வைட் ஹவுஸ் செராமிக் நிறுவனத்தைச் சேர்ந்த இடமாகக் கூறப்படுகிறது. இந்த போலி டோல் பிளாசாவிற்கு வாகனங்கள் திசை திருப்பப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, மோர்பி மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலரும் அந்த இடத்திற்கு விரைந்து சென்று இதனைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த போலி டோல் பிளாசா கண்டறியப்பட்டதையடுத்து, அது அமைந்திருக்கும் நிலத்தின் உரிமையாளர்கள் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.