வீல் சேரில் வந்து ராஜ்யசபாவில் கலந்து கொண்ட மன்மோகன் சிங்: காங்கிரஸை சாடும் பாஜக
டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு(திருத்தம்) மசோதா, 2023 குறித்த விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற நிலையில், இந்த முக்கியமான கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(90) வீல் சேரில் நேற்று(ஆகஸ்ட் 8) நாடாளுமன்றத்திற்கு வந்தார். மத்திய அரசுக்கு எதிராகவும் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு சாதகமாகவும் ஓட்டளிப்பதற்காக அவர் மாநிலங்களவை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்க்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதா, "நேர்மையின் கலங்கரை விளக்கமான டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க இன்று ராஜ்யசபாவுக்கு வந்தார். அவர் அளித்த விலைமதிப்பற்ற ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்." என்று கூறியிருந்தார்.
'இது மிகவும் வெட்கக்கேடானது': பாஜக
ஆனால், நாடாளுமன்றத்திற்கு மன்மோகன் சிங் வந்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே அரசியல் விவாதம் வெடித்துள்ளது. "காங்கிரஸின் இந்த பைத்தியக்காரத்தனத்தை நாடு நினைவில் கொள்ளும்! இவ்வளவு மோசமான உடல்நிலையில் இருக்கும் ஒரு முன்னாள் பிரதமரை காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு வர வைத்து சக்கர நாற்காலியில் அமர வைத்திருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது!" என்று பாஜக காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளது. மேலும், டெல்லி மசோதாவுக்கு ஆதரவான வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க காங்கிரஸ் அவரை அழைத்து வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. "டாக்டர் மன்மோகன் சிங்கின் ஜனநாயகத்திற்கான இந்த அர்ப்பணிப்பு இந்த நாட்டின் அரசியலமைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாகும்." என்று பாஜகவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் பதிலளித்துள்ளார்.