முழு அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் சென்னை முகலிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 75 வயதான ஈவிகேஎஸ் இளங்கோவன், நுரையீரல் தொடர்பான சிக்கல்களால் சனிக்கிழமை (டிசம்பர் 14) காலை காலமானார். இதையடுத்து மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக எம்பி கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அரசு மரியாதை
சனிக்கிழமை மாலை, காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க, இளங்கோவனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தமிழக அரசியலுக்கும் பெரும் இழப்பாகும். ஒரு முக்கிய அரசியல் பிரமுகரான இளங்கோவன், மத்திய இணை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், எம்எல்ஏ, மற்றும் எம்பி உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். பெரியாரின் மூத்த சகோதரரின் பேரனான இவர், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது மகன் திருமகன் ஈவேரா மறைவிற்கு பிறகு இடைத்தேர்தல் மூலம் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.