நீட் தேர்வு: மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவோரின் ஆதிக்கம்
முதல் முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களை விட, மீண்டும் மீண்டும் தேர்வு எழுதும் அதிகமானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்குகிறது. அதன்படி, இந்த முறை, 7.5% இடஒதுக்கீடு பிரிவின் கீழ் தகுதி பெற்ற 2,993 அரசுப் பள்ளி மாணவர்களில், 2,363(79%) பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள் ஆவர். அதில், 630 பேர் மட்டுமே முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் இதே நிலை தான் நிலவி வருகிறது.
வருங்காலத்தில் 10% மாணவர்களால் மட்டுமே மருத்துவ சீட்டை உடனடியாக பெற முடியும்
பிற அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கீழ், மருத்துவ தகுதி தேர்வு எழுதிய 25,856 பேரில் 17,430 (67%) பேர் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதியவர்கள் ஆவர். இதில், 8,426 பேர் மட்டுமே முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, 28,849 பேர் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதில், 19,793 (69%) விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வை ஒருமுறைக்கு மேல் எழுதியவர்கள் ஆவர். இதனால், வருங்காலத்தில், 12ஆம் வகுப்பு முடித்தவுடன் தேர்வு எழுதும் 10% மாணவர்களால் மட்டுமே மருத்துவ சீட்டை உடனடியாக பெற முடியும் என்ற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படலாம் என்கின்றனர் கல்வியாளர்கள்.