நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: தகுதி நீக்கப்படுவாரா எம்பி மஹுவா மொய்த்ரா?
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான நெறிமுறைக் குழு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த விவகாரம் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும், அது இன்னும் மக்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து எம்பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தொழிலதிபர் ஹிராநந்தானியுடன் தனது நாடாளுமன்ற உள்நுழைவு பாஸ்வோர்டுகளை எம்பி மொய்த்ரா பகிர்ந்து கொண்டதாகவும், அதனால் தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், எம்பி மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது.
எப்போது அறிக்கை தாக்கல் செய்யப்படும்?
இது குறித்து விசாரித்த நாடாளுமன்ற நெறிமுறைக் குழு, இன்று இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பட்டியலிட்டிருந்தது. கேள்வி நேரத்திற்குப் பிறகு இந்த அறிக்கையை சமர்ப்பிக்க பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், மதிய உணவுக்காக மதியம் 1 மணியளவில் அவைகள் ஒத்திவைக்கப்படும் வரை அது தாக்கல் செய்யப்படவில்லை. இதனையடுத்து, இது குறித்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அது ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என்பது நெறிமுறைக் குழுவுக்கு தான் தெரியும் என்று கூறியுள்ளார். இன்று அல்லது நாளை அது தாக்கல் செய்யப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து பேசிய எம்பி மொய்த்ரா, அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இதுகுறித்து கருத்து தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.