
மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர்
செய்தி முன்னோட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் மண்பாண்ட தொழில்தான் அதிகம் நடைபெறும்.
ஆனால் உலோகப்பாத்திரங்களின் பயன்பாடு அதிமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் பயன்பாடு பெருமளவில் குறைந்துள்ளது.
இதனால் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் வெகு சிலரே தற்போது ஈடுபட்டுள்ளனர்.
எனினும், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மட்டும் மண்பாண்டங்களில் பொங்கல் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை கொள்ளிடம் அருகேயுள்ள திருமயிலாடி, வேட்டங்குடி, மாதானம், மாதிரவேளூர், போன்ற இடங்களில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்வோர் மட்டுமே இத்தொழிலை தொடர்ந்து செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
மண்
குலத்தொழிலை தொடரும் குடும்பம்
அப்படி தனது குடும்ப குலத்தொழிலை கைவிடாமல் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் மாரிமுத்து என்பவர் விடுமுறை தினங்கள் மற்றும் தனது ஓய்வு நேரங்களில் மண் பானைகளை செய்து வருகிறார்.
இவருக்கு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்த அவரது மகன் துளசேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உதவியாக உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் ஏரோநாட்டிக்கல் பட்டதாரியாக இருந்தும் தனது குடும்ப தொழிலை கற்றுக்கொண்டு துளசேந்திரன் மண்பானைகளை தயார் செய்து வருகிறார்.
பட்டதாரி
மண்பானை செய்யும் நோக்கம் குறித்து பேசிய பட்டதாரி
இதுகுறித்து துளசேந்திரனிடம் கேட்கையில், "நான் ஏரோநாட்டிக்கல் பட்டதாரி. ஆனால் இது எனது குலத்தொழில் என்பதால் எனது தந்தையிடம் இந்த செய்முறையினை கற்றுக்கொண்டு மண்பானை, மண்சட்டி, மண்சிலைகள், மண்ணடுப்பு உள்ளிட்ட பொருட்களை செய்து வருகிறேன்" என்று கூறினார்.
மேலும் இத்தொழில் தற்போது அழியும் தருவாயில் உள்ளது என்றும்,
அதனை காப்பாற்ற வேண்டும் என்னும் தான் இத்தொழிலை கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
மண் பாண்டங்களில் சமைத்து சாப்பிட்ட நமது மூதாதையர்கள் பல ஆண்டுகள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் என்று குறிப்பிட்ட பேசிய இவர், சில கோரிக்கைகளையும் எடுத்துரைத்தார்.
கோரிக்கை
தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகள்
அதன்படி, இயற்கையுடன் பிணைந்துள்ள மண்பாண்டங்களை தயாரிக்கும் தொழிலை தற்போதைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் மண்பானை, மண்ணடுப்பு உள்ளிட்டவை சேர்த்து வழங்கப்படவேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விநியோகிக்கும் மழைக்கால நிவாரணத்தொகையினை ரூ.10,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும், டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்யும் மழை காரணமாக மண்பாண்ட தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது என்று வருத்தம் தெரிவித்தார்.
வேண்டுகோள்
தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்
கனமழை காரணமாக பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டங்கள் செய்யும் பணிகள் கடினமாக பாதிக்கப்பட்ட நிலையில், மண்பாண்ட உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
இதனையடுத்து அவர், 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மண்பாண்ட தொழிலையும், தொழிலாளர்களையும் காக்க விடுபட்ட நபர்களுக்கு மழைக்கால நிவாரண தொகையினை உடனடியாக கணக்கீடு செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்றும் கூறியுள்ளார்.