நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம்
டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுப்பாட்டில்களின் விலை ரூ.10 அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், இது குறித்து டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையின்படி, தமிழ்நாடு மாநில வாணிப கழகம்-மதுபான சில்லரை விற்பனை கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி-விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் கடமையினை தவறி மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள MRP விலையினை விட கூடுதலாக விற்பனை செய்யும் பட்சத்தில், துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே மதுபானங்களை 'டெட்ராபேக்' மூலம் விற்பனை செய்ய தமிழகத்தினை சேர்ந்த 4 விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, அமைச்சர் சு.முத்துசாமிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர்.
'டெட்ராபேக்' விற்பனைக்கு ஆறுதல் தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள்
அதன்படி, மதுபானங்கள் தற்போது கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அந்த காலிபாட்டில்களை, மது அருந்துவோர் கண்ட இடங்களில் போட்டுவிடுகிறார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் பாசனக்கால்வாய் உள்ள பகுதிகள், வேளாண் விளைநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மதுபான பாட்டில்களை அதிகம் காணமுடியும். இவ்வாறு எறியப்படும் கண்ணாடிப்பாட்டில்கள், வேளாண் வேலைச்செய்யும் பணியாளர்கள் கால்களை குத்தி கிழிப்பதோடு, நெல் அறுவடை செய்கையில் இயந்திரம் மூலம் நெல்லொடு சேகரிக்கப்படுகிறது. அந்த கண்ணாடித்துகள்கள் நொறுங்கிய நிலையில் அரிசியிலும் கலப்பதாக பல்வேறு புகார்கள் எழுகிறது. இத்தகைய கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த காண்ணாடி பாட்டில்களை தவிர்த்து தமிழக அரசு கருத்து தெரிவித்து வரும் இந்த மக்கக்கூடிய அட்டை பாட்டில்கள்(டெட்ராபேக்)மூலம் மதுக்களை விற்பனை செய்யலாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.