31 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் என மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி; சிக்கியது எப்படி?
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று, 31 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் என்று கூறிக்கொண்டு வந்த ஒருவருடன் உணர்வுபூர்வமாக மீண்டும் இணைந்தது. ஆனால், அந்த நபர் தொடர் மோசடி செய்பவர் என அம்பலப்படுத்தப்பட்டதால் அதிர்ச்சியில் முடிந்தது. ராஜு அல்லது பீம் என்று அழைக்கப்படும் இந்திரராஜ், நீண்ட காலத்திற்கு முன்னர் காணாமல் போனவராக நடித்து குடும்பத்தினரை ஏமாற்றி கொள்ளையடித்து வந்துள்ளது தெரியவந்ததை அடுத்து காசியாபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, 1993 ஆம் ஆண்டு ஏழு வயதில் தான் கடத்தப்பட்டதாகக் கூறி, ஊடகங்கள் மற்றும் சமூக தளங்கள் மூலம் தனது வீட்டுக்கு வருவதை விளம்பரப்படுத்த உதவுமாறு ராஜு காவல்துறையை அணுகினார்.
குடும்பத்தினர் சந்தேகம்
மகனை 1993 சமயத்தில் தொலைத்த ஒரு குடும்பம் காவல்துறை மூலம் அடையாளங்களை சரிபார்த்து உறுதி செய்து, அவரை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டனர். எனினும், அவரை சந்தேகத்துடன் பார்த்த காணாமல் போன தந்தை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வைத்துள்ளார். அதில், அவருக்கு இந்த குடும்பத்துடன் தொடர்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, இந்த செய்தியை பார்த்து, சில காலம் முன்னர் இதே நபர் தங்கள் மகன் எனக் கூறி குடும்பத்துடன் சேர்ந்ததாக உத்தரகண்டில் வசிக்கும் ஒரு குடும்பம் புகார் செய்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறை டிஎன்ஏ சோதனை மற்றும் விசாரணையை முடுக்கி விட்ட நிலையில், தற்போது குட்டு அம்பலமாகி உள்ளது.
ஒன்பது குடும்பங்களை ஏமாற்றிய நபர்
விசாரணையில் ராஜுவின் நீண்ட நெடிய மோசடி வரலாறு தெரியவந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், 2005 ஆம் ஆண்டு தனது வழக்கமான திருட்டுப் பழக்கத்தால் சொந்தக் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போதிருந்து, அவர் குறைந்தது ஒன்பது குடும்பங்களுடன் இதேபோல் ஏமாற்றி வாழ்ந்துள்ளார். போலீஸ் துணை கமிஷனர் நிமிஷ் பாட்டீல் கூறுகையில், ராஜு அவர்களின் சொத்துக்களுக்காக வீடுகளை குறிவைத்து, குடும்ப உறவுகள் என்ற போர்வையில் சொத்து விவரங்களை அடிக்கடி விசாரித்தார். பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் அவர் மோசடியாக வாழ்ந்த குறைந்தது ஐந்து இடங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதே போன்ற குற்றங்களுக்காக 2021இல் சிறையில் அடைக்கப்பட்ட தகவலும் தெரிய வந்த நிலை, காவல்துறை விசாரணையை வேகப்படுத்தி உள்ளது.