வாக்காளர் அட்டை ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தியாவில் இனி வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 1ம்தேதி மட்டுமல்லாமல் இனி ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 உள்ளிட்ட தேதிகளிலும் இனி வாக்காளர் அட்டையினைப்பெற 18 வயது நிரம்பிய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் 18 வயது நிறைவடைந்த அடுத்த காலாண்டிலேயே அவர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம். இந்த பெயர் சேர்க்கைக்கு பிறகு வாக்காளர் அடையாளஅட்டை குறிப்பிட்ட நபரின் புகைப்படத்தோடு அவர்களுக்கு வழங்கப்படும். இந்தாண்டு ஏப்ரல் 1ம்தேதி மேற்கொண்ட புதுப்பிப்பிற்கான காலம் முடிந்து, காலாண்டில் தகுதியேற்றம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் இன்று(மே.,31)வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி 1, 2023ம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது
மேற்கூறியவாறு 2ம் காலாண்டில் மேற்கொண்ட தொடர் திருத்த காலத்தின் போது, புதிய வாக்காளர்களாக 1,23,064 நபர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், முகவரி மாற்றம் செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 51,295ஆக உள்ளது. மேலும் 9,11,820 வாக்காளர்களின் பெயர்கள் இரட்டை பதிவு, பிறப்பு, இறப்பு, இடம் மாறுதல் போன்ற காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2,60,103 வாக்காளர்களின் அட்டைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயரினை சேர்க்க, நீக்க, திருத்த அல்லது இடமாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 1, 2023ம் தேதியில் இருந்து பெறப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.