அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும்
அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய நிதியுதவியை அனுமதித்த தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், அரசியலமைப்பின் 19(1)(ஏ) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகவும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தனது தீர்ப்பில் கூறியது. ஒருமித்த தீர்ப்பில், தேர்தல் பத்திரங்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு, அதனை வழங்கும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வழங்குவது தொடர்பாக எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை வழங்கியது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்கள்
தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு எஸ்.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 12-2019 முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஒவ்வொரு தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, வாங்குபவரின் பெயர் மற்றும் பத்திரத்தின் மதிப்பு ஆகியவையடங்கும். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். மார்ச் 6,2024க்குள், மூன்று வாரங்களுக்குள் எஸ்பிஐ இதனை அளிக்க வேண்டும். மார்ச் 13, 2024க்குள் எஸ்பிஐ-யிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைத் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்களை, வாங்கியவரிடம் திருப்பி அளிக்க வேண்டும். அதற்கான தொகையை வாங்கியவரின் வங்கிக் கணக்கில் எஸ்பிஐ திருப்பி செலுத்தவேண்டும்.