தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்திருந்தார். ஆனால் அன்று நள்ளிரவே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் தான் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வாக்குசதவீதத்தில் ஏற்பட்ட முரண் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. பலத்த விவாத பொருளாகவும் மாறியது. இது குறித்து சனிக்கிழமை தலைமைத் தேர்தல் அதிகாரி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த சந்திப்பும் நடைபெறாமல் போனது.
மீண்டும் வாக்கு சதவீதத்தில் குழப்பம்
இதற்கிடையே நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை பகுதியில் 53.96% வாக்குகளும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு. அப்போது அவர்,"செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டதால் தவறு நடைபெற்றது". "செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்ததால் சதவீத குளறுபடி ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர காலதாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம்" என்று கூறினார்.