படிவம் 6-ல் சர்ச்சைக்குரிய பிரகடன கேள்வி நீக்கம்: எதிர்ப்பிற்கு அடிபணிந்த தேர்தல் ஆணையம்
செய்தி முன்னோட்டம்
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப் பயன்படும் படிவம் 6-ல் இணைக்கப்பட்டிருந்த சிறப்பு தீவிர திருத்த (SIR) பிரகடனப் படிவத்தை, SIR நடைமுறை முடிவடைந்த மாநிலங்களின் ECINET போர்ட்டலில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. முன்னதாக, புதிய வாக்காளர்கள் தங்களது அல்லது தங்களது பெற்றோரின் தகவல்களை முந்தைய SIR வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் வகையில் பிரகடனப் படிவம் இணைக்கப்பட்டிருந்தது.
சர்ச்சை
பின்னணியும் சர்ச்சையும்
சட்டப்பூர்வ படிவங்களில் திருத்தம் செய்யும் அதிகாரம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு மட்டுமே உள்ள நிலையில், சட்ட அமைச்சகத்தின் அனுமதியின்றி இந்த பிரகடனம் இணைக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26 அன்று கூடிய முழு ஆணையக் கூட்டத்தில், SIR நடைமுறை தற்போதைய நிலையில் நடைபெற்று வரும் மாநிலங்களில் மட்டுமே இப்பிரகடனம் பயன்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களில் வழக்கமான படிவங்களே பயன்பாட்டில் இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
மாற்றம்
புதிய வாக்காளர்களுக்கு ஏற்படும் மாற்றம்
புதன்கிழமை இரவு முதல், SIR பணிகள் நிறைவடைந்த மாநிலங்களில் ECINET போர்ட்டலில் இந்தப் பிரகடனப் பிரிவு அகற்றப்பட்டுள்ளது.
SIR பணிகள் முடிந்த மாநிலங்களில் உள்ள புதிய வாக்காளர்கள் இனி தங்களையோ அல்லது தங்களது பெற்றோரையோ பழைய SIR பட்டியலுடன் இணைத்துக் காட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.
தற்போது SIR நடைமுறை தீவிரமாக நடைபெற்று வரும் 13 மாநிலங்களில் மட்டும் படிவம் 6-ல் ந்த பிரகடனம் தொடர்ந்து இடம்பெறும்.
விதிகளின்படி திருத்தப்படாத ஒரு படிவத்தை ஆன்லைனில் கட்டாயமாக்கியது தொடர்பாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இந்த பின்வாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.