
பாமகவில் அன்புமணி ராமதாஸுக்குதான் அதிகாரம்; இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்; ராமதாஸ் தரப்புக்குப் பின்னடைவு
செய்தி முன்னோட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நடந்து வந்த அதிகாரப் போராட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவை அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், கட்சியின் பெயர், சின்னம், மற்றும் கொடியைப் பயன்படுத்தும் உரிமை அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாமகவில் கடுமையான உட்கட்சிப் பூசல் நிலவி வந்தது. கட்சித் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது, வன்னியர் சங்க மாநாட்டில் அவர் பேசியது எனப் பல சம்பவங்கள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தன. கட்சியின் எதிர்காலம் கருதி அன்புமணியை தலைவராக்கினாலும், அவர் தனித்துச் செயல்படுவதாக உணர்ந்த ராமதாஸ், அன்புமணியின் பல்வேறு கூட்டங்களுக்குத் தடை விதிக்க முயன்றார்.
அன்புமணி
அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு
இருப்பினும், அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் ஒரு பொதுக்குழுவைக் கூட்டி, அடுத்த ஆண்டு வரை தானே தலைவராகத் தொடர்வேன் எனத் தீர்மானம் நிறைவேற்றி, அதனைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தார். இதற்கிடையே, ராமதாஸும் தனி பொதுக்குழுவைக் கூட்டித் தீர்மானங்களை அனுப்பிய நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் அன்புமணியின் தலைமையிலான பொதுக்குழுவை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவின்படி, தி.நகரில் உள்ள பாமக அலுவலகம் கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகமாகவும், அன்புமணி கட்சியின் தலைவராகவும், வடிவேல் ராவணன் பொதுச் செயலாளராகவும், திலகபாமா பொருளாளராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். பாமகவின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முடிவு, ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.