மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கடந்த ஆண்டு நடந்த சிவசேனா பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(மே 11) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததார்கள் என்று முதல்வர் ஷிண்டே மற்றும் 15 எம்எல்ஏக்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா என்பதை உச்ச நீதிமன்றம் இன்று முடிவு செய்யும். கடந்த ஆண்டு, ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவுடன், சிவசேனாவை பிளவுபடுத்தி, பெரும்பாலான எம்எல்ஏக்களை கூட்டு சேர்த்து புதிய அரசாங்கத்தை அமைத்தார். இதனையடுத்து, உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டால், முதல்வர் பதவியில் இருந்து விலகுவார்
ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர் மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும். மேலும், அவரது அரசாங்கம் கலைக்கப்படும். அதன் பிறகு, எந்த அணியிடம் அதிக எண்ணிக்கையிலான எம்எல்ஏக்கள் இருக்கிறார்களோ, அந்த அணி புதிய அரசாங்கத்திற்கு உரிமை கோரும். இரு தரப்பிலிருந்தும் எந்த எம்எல்ஏக்களாவது அணி மாறுகிறார்களா என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதற்கான முடிவை எடுக்க உள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணிக்காக வாதிட்டனர். ஹரிஷ் சால்வே, நீரஜ் கவுல் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் ஏக்நாத் ஷிண்டேவிக்காக பேசினர்.