ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக 11 மாத குழந்தைக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளனர். இது குறித்து அம்மருத்துவமனை முதல்வர் எ.தேரணிராஜன் கூறுகையில், திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த 11 மாத குழந்தை தீவிர நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த குழந்தையின் நிலை இப்படியே தொடர்ந்தால் இறக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் பல உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. எனினும், ஒரு கட்டத்திற்கு மேல் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்தாக வேண்டும் என்னும் நிலை ஏற்பட்டது. மேலும் குழந்தைக்கு தீவிரமான காசநோய் பாதிப்பும் இருந்ததால் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது என்று தெரிவித்தார்.
நலம் அடைந்து வீடு திரும்பிய குழந்தை
தொடர்ந்து, ரத்த நாளத்தினை நேரடியாக இணைக்கும் கருவி ஒன்று நெஞ்சக பகுதிக்குள் பொருத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து மிக சிக்கலான சிகிச்சை என கூறப்படும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக 'ஸ்டெம் செல்ஸ்' தானமாக பெறப்பட்டது. காசநோயிலிருந்து மீண்டுவந்த குழந்தைக்கு, துணை பேராசிரியர் அருணா, குருதிசார் துறை தலைவரான ஹரிஹரன், குழந்தைகள் குருதிசார் சிகிச்சை துறை தலைவரான மருத்துவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரின் தலைமையிலான மருத்துவ குழுவினர், கேத் முறை வாயிலாக ஸ்டெம் செல்களை மாற்றி, சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை, தற்போது நலம் பெற்று வீடு திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.