Page Loader
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு 

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு 

எழுதியவர் Sindhuja SM
May 20, 2024
04:10 pm

செய்தி முன்னோட்டம்

தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்கக் கோரி அமலாக்க இயக்குனரகம் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தது. கெஜ்ரிவால் தற்போது இடைக்கால ஜாமீனில் இருப்பதாகவும், ஜூன் 2 ஆம் தேதி அவரை சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. நீதிமன்றம் நிலுவையில் வைத்திருக்கும் அமலாக்கத்துறையின் மனுவை ஜூன் 2 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மதுபான கொள்கை மீதான அமலாக்கத்துறையின் பணமோசடி விசாரணை தொடர்பாக மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, மே 10 அன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

டெல்லி 

பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் நீதிமன்ற காவல் நீடிப்பு 

இருப்பினும், கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகத்திற்கும் டெல்லி செயலகத்திற்கும் செல்லக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுத் தேர்தலில் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த ஒரு நாள் கழித்து, ஜூன் 2-ம் தேதி அவர் சரணடைந்து மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த சமீபத்திய குற்றப்பத்திரிகையில், கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதற்கிடையில், இதே வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த இணை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் நீதிமன்ற காவலை ஜூன் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.