பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும்
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2023-2024 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 6.5% வளர்ச்சி காணும். நடப்பாண்டு, 2022-23 இன் GDP 7% ஆகவும், கடந்த நிதியாண்டு (2021-22) GDP 8.7% ஆகவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தாலும், முன்னணி நாடுகளிடையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும். வருடாந்திர யூனியன் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன்னரே, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
நாட்டின் GDP வளர்ச்சியும் எதிர்கொண்ட சவால்களும்
மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவும் பலவிதமான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய பொருட்களின் விலை உயர்வு, பண வீக்கம், இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட பலவிதமான நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியாவின் நடப்பாண்டுக்கான பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றும், இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனிநபரின் வாங்கும் திறன் சமபநிலையின் அடிப்படையில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்பது குறிப்பிடத்தக்கது. COVID-19 தொற்றால் ஏற்பட்ட மந்த நிலை மாறி, பொருளாதாரம் கிட்டத்தட்ட மீண்டுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.