பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள்
மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒன்றிணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஜன 31) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13ஆம் தேதி முடிவடையும். இரண்டாம் பகுதி மார்ச்-13 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும். . குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கை 2023ஐ தாக்கல் செய்வார். மத்திய பட்ஜெட் 2023 சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்திருக்கிறது. இந்த மத்திய பட்ஜெட் 2023இல் மாநில விவகாரங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையின் முக்கிய மேற்கோள்கள்
முர்மு தனது உரையில், ஆத்மநிர்பர் பாரத் அல்லது தன்னம்பிக்கைக்கான அழைப்புகளை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், "அச்சமற்ற மற்றும் தீர்க்கமான அரசாங்கம்" இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது என்று கூறினார். இந்தியாவின் டிஜிட்டல் நெட்வொர்க் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று பாராட்டிய அவர், நாடு புனித யாத்திரை மையங்களை வளர்த்து வருகிறது, அதே நேரத்தில் ஒரு பெரிய விண்வெளி சக்தியாகவும் மாறி வருகிறது என்று கூறினார். "எங்கெல்லாம் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறதோ... அந்த நாடுகள் உலக நெருக்கடியால் சூழப்படுகின்றன. ஆனால் தேசிய நலனுக்காக எனது அரசு எடுத்த முடிவுகளால், இந்தியா சிறந்த நிலையில் உள்ளது" என்று மோடி அரசை முர்மு மேலும் பாராட்டினார்.