செங்கல்பட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் - பீதியடைந்த மக்கள்
தமிழகத்தில் இன்று(டிச.,8)காலை செங்கல்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவில் 3.2-ஆக பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு இன்று காலை சுமார் 7.39 மணிக்கு ஏற்பட்டது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த அதிர்வின் மையமானது தரைமட்டத்திலிருந்து சுமார் 10கி.மீ., ஆழத்தில் அமைந்திருந்தது என்றும், இந்த அதிர்வின் தாக்கம் 100 கி.மீ., சுற்றளவு கொண்டதாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் பீதியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு அலறியடித்து கொண்டு வெளியேறினர். இதற்கிடையே கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியிலும் நிலநடுக்கம் இன்று காலை 6.52 மணிக்கு உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 3.1-ஆக பதிவாகியுள்ளது என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.