SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை
அடுத்த மாதம் நடைபெறவுள்ள SCO உச்சிமாநாட்டின் போது, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பில்லை என NDTV தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில் பிலாவல் பூட்டோ பங்கேற்க இருக்கிறார். 2014ஆம் ஆண்டு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார். அதற்கு பிறகு, பாகிஸ்தான் தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். மே 4-5ஆம் தேதிகளில் நடைபெறும் SCO வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின்(CFM) போது பாகிஸ்தான் தூதுக்குழுவை பிலாவல் பூட்டோ வழிநடத்துவார். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாட்டுடன் நட்பு பாராட்ட முடியாது: வெளியுறவுத்துறை அமைச்சர்
பாகிஸ்தான் நாட்டிற்குள் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கிறது. "எங்களுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும்" அண்டை நாட்டுடன் இந்தியா நட்புடன் பழக முடியாது என்று சில நாட்களுக்கு முன்பு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி இருந்தார். "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது, ஸ்பான்சர் செய்வது போன்ற செயல்கள் இனி நடக்காது என்ற உறுதிப்பாட்டை அவர்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். என்றாவது ஒரு நாள் அந்த நிலையை அடைவோம் என்று தொடர்ந்து நம்புகிறோம்." என்று அவர் மேலும் கூறி இருக்கிறார். கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.