கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியா மற்றும் கனடா இடையே உறவு கடுமையாக சீர்குலைந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நாளை நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையில் ஆற்றும் உரையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் மர்மமான நபர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டினார். கனடா பிரதமர் தனது குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை வழங்காத நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே மோதலை அதிகரித்துள்ளது.
ஐநா சபையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரை
கனடா பல காலமாக காலிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்நாட்டு அரசே இதை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்திய புலனாய்வு அமைப்புகளும், கனடாவில் தீவிரமாக செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து ஆதாரங்களை வெளியிட்டும் கனடா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ஐநா சபை கூட்டத்தில் புதன்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார். அவரது உரையில் ஜி20 உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகம் இடம்பெறும் என்றாலும், கனடா விவகாரத்தில் கடுமையான பதிலடி அவரது உரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.