'E20 ஜனதா கட்சி': சிஜேபி பாணியில் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்த புதிய போராட்டம்
செய்தி முன்னோட்டம்
காக்ரோச் ஜனதா கட்சியின்(CJP) வைரல் வளர்ச்சி மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது 'ஈ20 ஜனதா கட்சி' என்ற புதிய இணையதள இயக்கம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் ஈ20 எத்தனால் கலந்த பெட்ரோல் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இந்த இயக்கம், பெட்ரோல் பங்குகளில் 100% தூய்மையான பெட்ரோலையும் கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. "இனி எத்தனால் இல்லை; இனி அமைதி இல்லை" போன்ற முழக்கங்களுடன் இயங்கி வரும் இவர்கள், நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர். மேலும், CJP இயக்கத்தின் பாணியிலேயே மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் ராஜினாமாவையும் இவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
பின்னணி
கட்சியின் மலேசிய பின்னணி
எக்ஸ் (X) தளத்தில் உருவெடுத்துள்ள இக்கட்சியின் கணக்கு குறுகிய காலத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களை பெற்றுள்ளது.
CJP இயக்கம் கரப்பான் பூச்சியைத் தனது சின்னமாகப் பயன்படுத்தியதைப் போல, இந்த புதிய இயக்கம் நண்டு உருவத்தைச் சின்னமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
மலேசியாவை இருப்பிடமாக குறிப்பிட்டுள்ள இந்த கணக்கு, தான் எத்தனால் கலப்புக்கு எதிரி அல்ல என்றும், நுகர்வோருக்கு மாற்று விருப்பம் மறுக்கப்படுவதற்கே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் விளக்கியுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும் மத்திய அரசு ஈ20 திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.
பழைய வாகனங்களின் இன்ஜின்களில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகே இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.