சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல இ-ஆட்டோ சேவை
சென்னை மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலான இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் இதில் தினந்தோறும் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மக்களின் பயன்பாட்டிற்கு இந்த மெட்ரோ ரயில் சேவை மிக வசதியாக கருதப்படுவதால், 2ம்கட்ட மெட்ரோ ரயில்களுக்கான கட்டுமானப்பணிகள் சென்னையில் நடந்து வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்கள் தங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு செல்லவோ, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லவோ ஆட்டோக்கள், ஊபர், ஓலா கார் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் மினிப்பேருந்துகளுக்காக காத்திருந்து அதில் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்நிலையில், மெட்ரோ நிர்வாகம் மக்களின் பயணத்தினை எளிதாக்க இ-ஆட்டோ சேவையினை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் 5 கிமீ.,தூரம் வரை இந்த ஆட்டோ சேவை செயல்படும் என்று கூறப்படுகிறது.
தினந்தோறும் இ-ஆட்டோவில் பயணம் செய்வோருக்கு கட்டண சலுகை
லெக்கோ என்னும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ நிர்வாகம் இந்த ஆட்டோ சேவையினை துவங்கி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சேவை முதற்கட்டமாக செண்ட் தாமஸ் மவுண்ட், மதுரவாயல் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் 28 ஆட்டோக்கள் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.20 என்னும் வீதத்தில் கட்டணமானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதம் முழுவதும் இந்த ஆட்டோ சேவையினை பயன்படுத்தும் மக்களுக்கு 20% கட்டண சலுகை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் கூகுள் பே, போன்பே மூலம் கட்டணம் செலுத்துவோருக்கு 10% கட்டண சலுகை என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரவாயல் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பெரிய குடியிருப்புக்குள் இந்த திட்டமானது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.