Loading...
ரூ.1,020 கோடி நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சகோதரரின் உதவியாளர் கைது
பணி நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சகோதரரின் உதவியாளர் கைது

ரூ.1,020 கோடி நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சகோதரரின் உதவியாளர் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2026
12:55 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.1,020 கோடி டெண்டர் மற்றும் பணி நியமன முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத்தை DVAC காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். செல்போன் உரையாடல்களில் சிக்கிய முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி

ரூ.1,020 கோடி லஞ்சப் புகாரும், வழக்கின் பின்னணியும்

முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என். நேரு பதவி வகித்தபோது, அத்துறையின் கீழ் வழங்கப்பட்ட டெண்டர்கள், பணி நியமனங்கள் மற்றும் பணியிட மாறுதல்களில் சுமார் ரூ.1,020 கோடி அளவிற்கு லஞ்சம் பெறப்பட்டு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோருக்குத் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உட்பட 25 இடங்களில் தீவிரச் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையில் முறைகேடு தொடர்பான 170 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஆதாரங்கள்

செல்போன் உரையாடல்களில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்து வந்த நிலையில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளராகப் பணியாற்றி வந்த கவி பிரசாத்திற்கு இந்த முறைகேடுகளில் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

குறிப்பாக, கவி பிரசாத்தின் செல்போன் அழைப்புகள் மற்றும் உரையாடல்களை ஆய்வு செய்ததில் டெண்டர் ஒதுக்கீடு மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளன.

இதனையடுத்து, வியாழக்கிழமை காலை அவரைக் கைது செய்த காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT