துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
நேற்று இரவு, செவ்வாய்கிழமை, துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் விமானத்தின் வால் முனையில் இருந்து புகை வெளியேறியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செவ்வாய்கிழமை இரவு 9.40 மணியளவில் விமானம் புறப்படுவதற்கு முன் தரை ஊழியர்களால் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. தரை ஊழியர்கள் விமானிகளை எச்சரித்த உடன் அவர்கள் விமான இயந்திரங்களை உடனடியாக ஆஃப் செய்தனர்.
வல்லுநர்கள் ஆய்விற்கு பின்னர் கிளம்பிய விமானம்
புகையின் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், எரிபொருள் தொட்டியில் உள்ள அதிகப்படியான எரிபொருளால் உருவாகும் வெப்பமே இதற்குக் காரணம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் ஏறத் திட்டமிடப்பட்ட மொத்தம் 320 பயணிகள் விமான நிலையத்தின் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் புறப்படுவதற்கு முன் ஏதேனும் பழுதுபார்ப்பு பணிகள் தேவையா என தொழில்நுட்ப வல்லுனர்கள் விமானத்தை ஆய்வு செய்தனர். தேவையான அனைத்து சோதனைகளுக்கும் பிறகு 280 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது.