பெங்களூரு பெண் அரசு ஊழியர் கொலை வழக்கில் பெரும் திருப்பம்: முக்கிய குற்றவாளியான டிரைவர் கைது
கர்நாடக அரசு ஊழியராக பணிபுரிந்து வந்த 37 வயதான பெண் புவியியலாளர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டார். அந்த கொலை வழக்கில் தற்போது போலீசார் அந்த பெண்ணின் முன்னாள் டிரைவரை கைது செய்துள்ளனர். சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் பணியாற்றிய பிரத்திமா கே.எஸ்(45) என்பவர் பெங்களூரு சுப்ரமணியபோரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெங்களூரில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள சிவமொக்காவிற்கு அவரது கணவரும் மகனும் சென்றிருந்ததால், சம்பவம் நடந்தபோது வீட்டில் யாருமில்லை. "கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்." என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்த் தெரிவித்துள்ளார்.
வேலையை விட்டு நீக்கியதால் வீடு புகுந்து கொலை
கைது செய்யப்பட்ட நபர் ஏழு முதல் 10 நாட்களுக்கு முன்பு வரை கொலை செய்யப்பட்ட பெண்ணின் டிரைவராக பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு ஊழியராக பணி புரிந்த வந்த அந்த டிரைவரை பிரத்திமா சில நாட்களுக்கு முன் வேலையை விட்டு நீக்கிவிட்டார். இதனால் கோபமடைந்த அந்த டிரைவர் பிரத்திமாவின் வீட்டில் யாரும் இல்லாத போது வீடு புகுந்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். கிரண் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த டிரைவர், கொலை செய்துவிட்டு, பெங்களூரில் இருந்து 200-கிமீ தொலைவில் உள்ள சாமராஜநகருக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர விசாரணைக்கு பிறகு, யார் கொலை செய்தது என்பதை கண்டுபிடித்த போலீசார் கிரணை கைது செய்தனர்.