42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற மெகா பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இதன் மூலம் 42 ஆண்டுகளில் தோடாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை மோடி பெற்றுள்ளார். மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியின் கூற்றுப்படி, 1982ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இங்கு மேற்கொண்ட பயணமே, இந்திய பிரதமர் ஒருவர் இந்த பகுதிக்கு மேற்கொண்ட கடைசி பயணம் ஆகும். முன்னதாக, தோடா நகரில் உள்ள ஸ்டேடியத்தில் பாதுகாப்பான தேர்தல் பேரணியை உறுதி செய்வதற்காக, தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய இரட்டை மாவட்டங்கள் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டது.
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் பேரணியில் மோடி உரை
ஜம்மு காஷ்மீர் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்ராவின் தீம் பார்க்கில் ஒரு பேரணியில் உரையாற்றினார். ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான அவரது முதல் பேரணி இதுவாகும். பாஜக மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் உள்ளது. மோடியின் பேரணி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடத்தை பார்வையிட்டனர். பாஜக வரவிருக்கும் 2024 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு பிரிவில் உள்ள 43 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்படும். அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளில் முதல் தேர்தல்
2014 தேர்தலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கடந்த 10 ஆண்டுகளில் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். மேலும் 370 மற்றும் 35ஏ சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தலும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 5 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8இல் நடைபெறும். வெள்ளிக்கிழமை, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, பேரணியில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். மேலும் மாநிலத்தில் மூன்றாவது முறையாக தாமரை மலரும் என்று வலியுறுத்தினார். இதற்கிடையே, ஹரியானா மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் முழு முயற்சியையும் செய்து வருகிறது.