புதிய குற்றவியல் சட்டங்கள் மூலமாக மருத்துவர்களுக்கு கிடைக்கப்போகும் பாதுகாப்பு
திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதா, மருத்துவ அலட்சியத்தால் உயிரிழக்கும் நிகழ்வுகளில் பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளில் இருந்து மருத்துவ நிபுணர்களுக்கு விலக்கு அளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார். இந்த சட்ட திருத்த மசோதா, தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, 97 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவையிலிருந்து வெளியேறி என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்திய அமித் ஷா, "தற்போது மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் ஏற்பட்டால், அது கொலைக்கு ஒப்பான குற்றவியல் தவறாக கருதப்படுகிறது. இதிலிருந்து மருத்துவர்களை காப்பாற்ற, இப்போது அதிகாரப்பூர்வ திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" எனக்கூறினார்.