இன்பநிதி பெயரில் பாசறை - போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட்
உதயநிதி ஸ்டாலின் மகனான இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளதாக புதுக்கோட்டையில் திமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், வரும் செப்டம்பர் 24ம் தேதி இன்பநிதி பாசறையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு, எதிர்காலமே, மண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை, போராட்ட களங்கள் இன்றி வெற்றி கிடைப்பதில்லை என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்போஸ்டரை ஒட்டிய புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகளான மணிமாறன் மற்றும் திருமுருகன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக துரைமுருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன் மற்றும் மாவட்ட மீனவர் அணியின் துணை அமைப்பாளரான மு.க.திருமுருகன் உள்ளிட்டோர் கட்சியின் கட்டுப்பாட்டினை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திமுக கட்சியினை எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியல் நடத்துவதாக தொடர்ந்து விமர்சித்து, கேளிக்கையாக பேசிவரும் நிலையில், இந்த பாசறை அமைத்த விவகாரம் மேலும் சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.