Loading...
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு: எம்.பி. ஆ.ராசா அறிவிப்பு
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு: எம்.பி. ஆ.ராசா அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Nov 28, 2026
11:57 am

செய்தி முன்னோட்டம்

நவம்பர் 30-ஆம் தேதி கூடவுள்ள மக்களவைக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) முடிவு செய்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கட்சி எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. ஆ.ராசா இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 'இண்டி' கூட்டணிக் கட்சிகள் இம்மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழலில், நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே திமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

50% இடங்கள் உயர்வு 

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு

இதுகுறித்து விளக்கமளித்த ஆ.ராசா, புதிய மசோதாவின்படி அனைத்து மாநிலங்களுக்கும் தற்போதைய எண்ணிக்கையிலிருந்து சமமாக 50 சதவீதம் மக்களவைத் தொகுதிகள் உயர்த்தப்படுவதால் இதனை ஆதரிப்பதாகக் கூறினார்.

குறிப்பாக, மக்களவையில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவம் 7.18 சதவீதமாக உள்ள நிலையில், புதிய மசோதா மூலம் அது 7.21 சதவீதமாக உயரும் வாய்ப்புள்ளதாகத் திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, திமுக ஆட்சியில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலேயே, எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருப்பதாக மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

ஆ.ராசா உறுதி

சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதில் திமுகவுக்கு உடன்பாடு இருந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைகளில் (Delimitation process) சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் தாங்கள் கவனமாக இருப்பதாக ஆ.ராசா தெரிவித்தார்.

இதுதொடர்பாகச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், நாடாளுமன்ற விவாதத்தின்போது சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்கத் தேவையான திருத்தங்களை வலியுறுத்துவோம் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT