விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - மியாட் மருத்துவமனை தகவல்
தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனது பொது வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இதன்படி மருத்துவர்கள் பரிந்துரைப்படி சிகிச்சைக்காக விஜயகாந்த், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று வருகிறார் என்னும் தகவலும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதே போல் இவர் சென்னை மணப்பாக்கத்தில் அமைந்துள்ள மியாட் மருத்துவமனையில் தான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளும் அவருக்கு இங்கு தான் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 18ம்.,தேதி சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில், தொடர் இருமல், மார்புசளி, காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதன் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
14 நாட்களுக்கு மருத்துவமனையின் தொடர் சிகிச்சை அவசியம் என தகவல்
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் இன்று(நவ.,29) ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் அவரது உடல்நிலை சீராக இல்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விஜயகாந்திற்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாக கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு இன்னும் 14 நாட்களுக்கு மருத்துவமனையின் தொடர் சிகிச்சை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தகவலானது அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.