LOADING...
சட்டமன்றத்தில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
சட்டமன்றத்தில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடிய கர்நாடக துணை முதல்வர்

சட்டமன்றத்தில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 22, 2025
02:21 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில சட்டமன்றத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கீதத்தைப் பாடியது வைரலாகி உள்ளது. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இந்த நிகழ்வை, சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் பற்றி பேசியதற்காக காங்கிரஸ் விமர்சித்ததோடு ஒப்பிட்டு காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி, "நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே..." என டி.கே. சிவகுமார் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடுவதாக ஒரு வீடியோவை தனது சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

விளக்கம்

டி.கே.சிவகுமார் விளக்கம்

இந்த சம்பவம், காங்கிரஸ் கட்சிக்குள் பல விஷயங்களில் உள்ள உள் கருத்து வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை என பந்தாரி குற்றம் சாட்டினார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டி.கே.சிவகுமார் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். "நான் பிறப்பால் ஒரு காங்கிரஸ்காரன். ஒரு தலைவனாக, எனது எதிரிகளையும் நண்பர்களையும் நான் அறிந்து கொள்ள வேண்டும். நான் அவர்களைப் பற்றிப் படித்துள்ளேன். பாஜகவுடன் கைகோர்ப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் காங்கிரஸை வழிநடத்துவேன்" என்று அவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ் கீதம்

சின்னசாமி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை மறுத்து பேசிய சிவகுமார், பிற மாநிலங்களில் பாஜக அரசுகளின் குறைபாடுகளையும் பட்டியலிட முடியும் என்று கூறினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், டி.கே.சிவகுமார் முன்பு ஆர்எஸ்எஸ் சீருடையை அணிந்திருந்ததாகக் குறிப்பிட்டபோது, அவர் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடியது குறிப்பிடத்தக்கது.