விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்
விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் தனது கணவரிடம் ஜீவனாம்சம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125வது பிரிவின் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கான உத்தரவை எதிர்த்து ஒரு முஸ்லீம் கணவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதை தள்ளுபடி செய்தது. மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
'ஜீவனாம்சம் என்பது திருமணமான பெண்களின் உரிமை'
"பிரிவு 125, திருமணமான பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்ற முக்கிய முடிவோடு குற்றவியல் மேல்முறையீட்டை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்" என்று நீதிபதி நாகரத்னா கூறினார். நீதிபதி நாகரத்னா, நீதிபதி மாசி ஆகியோர் தனித்தனியாக, ஆனால் ஒரே நேரத்தில் தீர்ப்புகளை வழங்கினர். ஜீவனாம்சம் கோரும் சட்டம், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்று பெஞ்ச் தெளிவுபடுத்தியது. ஜீவனாம்சம் என்பது திருமணமான பெண்களின் உரிமை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. "இல்லத்தரசியாக இருக்கும் மனைவி, உணர்ச்சி ரீதியாகவும் பிற வழிகளிலும் உங்களை சார்ந்திருக்கிறார்கள் என்பதை சில கணவர்கள் உணரவில்லை. இந்திய ஆண் ஒரு இல்லத்தரசியின் பங்கையும் தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது." என்று நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.