திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது
திருப்பதியில் பக்தர்கள் வரும் ஜனவரி.1ம்.,தேதிவரை சொர்க்கவாசல் வழியே அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கான இலவச தரிசனத்திற்கு நாள்ஒன்றுக்கு 43 ஆயிரம் டோக்கன்கள் என்னும் வீதம் 10 நாட்களுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச சர்வத்தரிசன டோக்கன்கள் கடந்த 22ம்.,தேதி மதியம் 2 மணிமுதல் விநியோகிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் முன்னதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது. இந்த இலவச டோக்கன்களை பெறுவதற்காக தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் திருப்பதியில் 21ம்.,தேதியே குவியத்துவங்கியது. கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பியதால் 21ம்.,தேதி நள்ளிரவு முதலே டிக்கெட் விநியோகம் துவங்கியது. 25ம்.,தேதி வரையிலான டிக்கெட்கள் மொத்தமும் 22ம்.,தேதியே தீர்ந்துள்ளது. இதனிடையே தரிசன டிக்கெட்டுகள் இன்றி எக்காரணம் கொண்டும் பக்தர்கள் சாமித்தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்தது.
ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தர வேண்டாம்
அதேசமயம், தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கோயில் வெளிப்புறம் கோபுர தரிசனம், வராக சாமி உள்ளிட்ட இதர சன்னதிகளை தரிசனம் செய்யவும், மொட்டையடிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது, திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் டோக்கன் விநியோகம் முடிவுற்றது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தர வேண்டாம் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, ஸ்ரீவாரி தரிசனம் செய்ய இயலாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.