அனைத்து கட்சி கூட்டம் - அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் பங்கேற்பு
2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நாளை(ஜூலை.,20) டெல்லியில் துவங்கவுள்ளது. இதன்படி இந்த வருடத்தின் நாடாளுமன்ற முதல் அமர்வானது அண்மையில் திறப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கவுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த கூட்டத்தொடரினையொட்டி இன்று(ஜூலை.,19) அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டமானது நடக்கவுள்ளது. தொடர்ந்து இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எதிர்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளிடம் நடக்கவுள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடரினை நல்ல முறையில் சுமூகமாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அழைப்பு விடுப்பு
முன்னதாக, இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சனையில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியானது. அதன் காரணமாகவே இந்த அனைத்து கட்சி கூட்டம் இன்று நடக்கிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று நடக்கவுள்ள அனைத்து கட்சிகள் கூட்டம் மற்றும் நாளை துவங்கவுள்ள மழைக்கால கூட்டத்தொடர் உள்ளிட்டவையில் கலந்துகொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்கள் ஆகியனவற்றுக்கு அதிமுக சார்பில் கழகத்தின் மக்களவை தலைவராக தான் பங்கேற்று தனது ஆலோசனைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.