சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்
செய்தி முன்னோட்டம்
அதிமுக ஆட்சியின்போது, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவ கல்லூரி ஒன்றினை அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார்கள் எழுந்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அவரது வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனையினை மேற்கொண்டனர்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79கோடி சொத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர் என்று கூறப்படுகிறது.
விசாரணை
29ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
அதன்படி, விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 22ம் தேதி 216 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையினை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் உள்ளிட்டோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு வரும் 29ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே கடந்த 5ம் தேதி விஜயபாஸ்கர் இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜரான நிலையில், தற்போது மீண்டும் அவரை ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.