"நிச்சயமாக ஒருநாள் பேசுவேன்": ED ரெய்டு குறித்து பேசிய இயக்குனர் அமீர்
நேற்று நடைபெற்ற ED ரெய்டு குறித்து இயக்குனர் அமீர் பேசியுள்ளார். இன்று காலை நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு பிராத்தனை கூட்டத்திற்கு பிறகு அவரிடம் அமலாக்கத்துறை சோதனையில் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இயக்குனர் அமீர், "அமலாக்கத்துறை சோதனையில் என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. அதை அவர்கள் தான் கூறவேண்டும். NCB 11 மணி நேர விசாரணை மற்றும் ED ரெய்டு நடந்தது உண்மைதான். இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து நான் சொல்வது ஒன்றுதான். எந்த விசாரணைக்கும் நான் தயார். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு எனக்கும் எந்த தொடர்பு இல்லை. இதுகுறித்து தற்போது எதுவும் பேசுவது முறையல்ல. ஆனால் விரைவில் இதுகுறித்து பேசுவேன்"என கூறினார்.
"என் மீது சந்தேக நிழல் விழுவதில் தப்பில்லை"
"போதை தடுப்பு துறையின் விசாரணை எனக்கு ஒரு புதிய அனுபவம் தான். என்னோடு பயணித்த ஒரு நபர் மீது இவ்வளவு பெரிய குற்றம் உள்ளது. குற்றப் பின்னணி உள்ளது என்ற நிலையில் என் மீது சந்தேக நிழல் விழுவதில் தப்பில்லை". "என் மீது சந்தேகமே படக்கூடாது என சொல்லக்கூடாது. குற்றப்பின்னணி கொண்ட ஒருவருடன் பயணித்தேன் என்ற காரணத்தால் என்னிடம் விசாரிப்பதில் நியாயம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தங்கள் இஷ்டத்திற்கு சமூகவலைதளத்தில் கதை சொல்கிறார்கள். அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி விரைவில் வரும்" எனத்தெரிவித்தார். உங்களை டார்கெட் செய்து விசாரணை நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அப்படி உறுதியாக சொல்ல முடியாது இது குறித்து உறுதியாக ஒரு நாள் பேசுவேன் எனத்தெரிவித்தார்.
இயக்குனர் அமீர்
"ED சில Files எடுத்துட்டு போயிருக்காங்க.. நான் ஒரு மாதமா பேசுறதே இல்ல.."#ameer #madurai #pressmeet #jaffarsadiq #edraid #thanthitv pic.twitter.com/JXX2BgCpH8— Thanthi TV (@ThanthiTV) April 10, 2024