வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம்: தமிழகம் மற்றும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு
டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளை அடர்ந்த பனிமூட்டம் தொடர்ந்து சூழ்ந்துள்ளது. இன்று காலை மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் வரை அந்த பனிமூட்டம் நீடித்தது. இருப்பினும், டெல்லியின் பல இடங்களில் மூடுபனியின் தீவிரம் சிறிதளவு குறைந்துள்ளது. அதனால், பார்வைத் திறன் 500 மீட்டரிலிருந்து 600 மீட்டராக அதிகரித்துள்ளது. ஜனவரி 2 வரை பஞ்சாப், டெல்லி, சண்டிகர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் அடர்ந்த மூடுபனி தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு பிறக்கும் வரை அப்பகுதிகளில் குளிர் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்தியாவுக்கான வானிலை அறிக்கை
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 8.30 மணி வரை நிலவிய மோசமான வானிலை காரணமாக சுமார் 80 விமானங்கள் தாமதமாகியுள்ளன. இதே காரணத்திற்காக பல ரயில்களும் தாமதமாகியுள்ளன. டெல்லி செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விமானங்கள் மாற்றிவிடப்பட்டுள்ளன. அடுத்த நான்கைந்து நாட்களில் மத்திய இந்தியாவின் குறைந்தபட்ச வெப்பநிலை(2-3 டிகிரி செல்சியஸ் வரை) படிப்படியாக உயரும் என்று IMD கணித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பனிப்பொழிவு மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி உட்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் ஜனவரி 2 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.