டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மும்முரமாக எடுத்து வருகிறது. இதனிடையே, அக்டோபர்.,5ம் தேதி முதல் 12ம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச்சட்ட விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிகிறது. அதன் ஓர் அங்கமாக, நேற்று(அக்.,8)சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தகவலறியும் உரிமை சட்ட விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சி பொது சுகாதாரத் துறை இயக்குனரான செல்வவிநாயகம் தலைமையில் நடந்தது. இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வவிநாயகம்,"மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டெங்கு பாதிப்பினை கண்டறிய சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.
ஒவ்வொரு நாளும் 40 பேர் டெங்குவால் பாதிக்கப்படுவதாக தகவல்
மேலும் அவர், டெங்கு பரிசோதனை முடிவுகளை விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, 6 மணி நேரத்தில் முடிவுகளை வழங்க பொது சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 3 மாதங்கள் டெங்கு பாதிப்பு பரவ அதிக வாய்ப்புள்ளது. மழைக்காலம் துவங்கும் போதே, கொசுக்கள் காரணமாக டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய் பரவல் மக்கள் மத்தியில் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 40 பேர் மாநிலம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். அதன்படி, இந்த டெங்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.