முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள்
தமிழகத்திற்கு காவிரிநீர் சரிவர வராத காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர், கடந்த ஜூன்.,12ம்தேதி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடி விவசாயத்திற்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடாமல் பிரச்சனை செய்து வருவதால், விவசாயத்திற்கு போதிய நீரினை திறந்துவிட இயலவில்லை. இதனால் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடபட்ட நெற்பயிர்கள் வாடிப்போனது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டருக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்க உத்தரவு விடுவதாக தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர் அறிவித்துள்ள இழப்பீடுத்தொகை ஏமாற்றம் தருவதாக டெல்டா விவசாயிகள் கூறியுள்ளனர்.
இழப்பீடு தொகையை ரூ.35,000மாக கொடுக்க வலியுறுத்தல்
இதுகுறித்து டெல்டா விவசாயிகள் சங்கத்தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் கூறுகையில், "தமிழக அரசின் வாக்குறுதியினை நம்பி, டெல்டா மாவட்டங்களில் பயிரிட்ட நிலையில், தற்போது பயிர்கள் அனைத்தும் கருகி போயுள்ளன". "ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடாக கேட்ட நிலையில், ஹெக்டருக்கு ரூ.13,500 என்பது ஏமாற்றமளிக்கிறது. இத்தொகையை, அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கொடுக்கவேண்டும்" என்று கூறியுள்ளார். இவரைத்தொடர்ந்து, காவிரி உரிமை செயற்பாட்டாளரான வழக்கறிஞர் வெ.ஜீவகுமார், தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ஜெகதீசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி உள்ளிட்டோர், அரசு இழப்பீட்டுத்தொகையினை ஏக்கருக்கு ரூ.35,000மாக உயர்த்தி கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி பேசியுள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் குறுவை சாகுபடிக்கு தற்போதுவரை காப்பீடு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.