ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வெளியிட்ட அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என டெல்லி பல்கலைக்கழகம்(DU) அறிவுறுத்தியுள்ளது. அனுமதியற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பது சட்ட நடவடிக்கைகளுக்கும், மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எச்சரிக்கையில், "இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால், அங்கு நடக்கும் சட்டவிரோதக் கூட்டங்களில் பங்கேற்பது சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்". தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி மற்றும் தவறான தகவல்களைக் கண்டு மாணவர்கள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போராட்டம்
நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
ஜூன் 20 அன்று ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்தப் போராட்டம், சமீபத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தடியடி மற்றும் மோதல்களைத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.
காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி இப்போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
நடவடிக்கை
மத்திய அரசின் நடவடிக்கைகள்
பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
CJP தலைமைக்கு பேச்சுவார்த்தைக்கான 4 முறைசாரா முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரித்து கடுமையான தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.