Page Loader
டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது 
இந்த வழக்குக்கு தற்போது "மிஷன் மலாமல்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது 

எழுதியவர் Sindhuja SM
Jun 05, 2023
11:46 am

செய்தி முன்னோட்டம்

கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் 64 வயது பெண் மற்றும் அவரது மகளை கொன்று அவர்களுக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தற்காக இரு உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த கொலைகளைச் செய்ததாக போலீஸார் கூறியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பீகாரில் உள்ள சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷன் (28) மற்றும் அங்கித் குமார் சிங் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராஜ்ராணி மற்றும் அவரது மகள் ஜின்னி கிராரின் உடல்கள் மே 31 அன்று கிருஷ்ணா நகரில் மிகவும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்குக்கு தற்போது "மிஷன் மலாமல்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

details

கொலை செய்வதற்கு முன் சட்ட ஆலோசனை பெற்ற கொலையாளிகள் 

கொலை செய்வதற்கு முன் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஏதோ ஒரு வெப் சீரிஸை பார்த்துவிட்டு போலீஸார் எப்படி செயல்படுவார்கள் என்று அவர்கள் தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருப்பதால், தற்போது எதையும் உறுதியாக கூற முடியாது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை, கிருஷ்ணா நகரின் E பிளாக்கில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஒரு நபர் இரவு 7.56 மணிக்கு போலீஸாருக்கு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு சூறையாடப்பட்ட வீட்டிற்குள் ராஜ்ராணி மற்றும் கிராரின் உடல்கள் கிடந்தன.