சிவில் சர்வீசஸ் பயிற்சி மைய மாணவர்கள் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்
டெல்லியின் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வர்கள் மூவரின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையை கண்காணிக்கவும், சரியான நேரத்தில் விசாரணை முடிக்கப்படுவதை உறுதி செய்யவும் தனியாக ஒரு அதிகாரியை நியமிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பவத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டும், விசாரணையில் பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதாக உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
மூவர் இறப்பு சம்பவத்தின் பின்னணி
கடந்த ஜூலை 27 அன்று பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழை நீர் புகுந்ததில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஸ்ரேயா யாதவ், தன்யா சோனி மற்றும் நெவின் டால்வின் ஆகியோர் இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்கள், தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பயிற்சி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லியில் உள்ள வடிகால் போன்ற உள்கட்டமைப்பு சரியாக இல்லை என்றும், அவை மோசமாக பராமரிக்கப்படுவதாகவும் கண்டித்துள்ளது.