சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் 5 மாத சிறைத்தண்டனை விதித்தது
அவதூறு வழக்கில் நர்மதா பச்சாவ் அந்தோலன் ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாத சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கை அப்போதைய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவர் வி கே சக்சேனா தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது டெல்லியின் லெப்டினன்ட் கவர்னராக பணியாற்றி வருகிறார். மேலும், சக்சேனாவுக்கு மேதா பட்கர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீடு செய்ய மேதா பட்கர் முடிவு
மேதா பட்கர், சக்சேனா குறித்து அவதூறான குற்றசாட்டுகளை வெளியிட்டார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு எதிராக சக்சேனா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, இது குறித்து சமூக வலைதளத்தில் பேசியிருக்கும் பட்கர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். "உண்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது... நாங்கள் யாரையும் இழிவுபடுத்த முயற்சிக்கவில்லை, எங்கள் வேலையை மட்டுமே செய்கிறோம்... நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ." என்று அவர் கூறியுள்ளார்.