Page Loader
காதலியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவக உரிமையாளர்
டெல்லியில் பெண்ணை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததற்காக தாபா உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

காதலியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவக உரிமையாளர்

எழுதியவர் Sindhuja SM
Feb 15, 2023
11:23 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியின் நஜாப்கர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்சாதன அறைக்குள் 25 வயது பெண்ணின் சடலம் நேற்று(பிப் 14) கண்டெடுக்கப்பட்டது. உணவக உரிமையாளரான சாஹில் கஹ்லோட்டைக் கைது செய்த போலீஸார், அவர் சில நாட்களுக்கு முன், தன் காதலியைக் கொன்று, அவரது உடலை ஃப்ரீசருக்குள் மறைத்து வைத்ததாகக் கூறி இருக்கின்றனர். உத்தம் நகரில் வசித்து வந்த அந்த பெண், இரண்டு-மூன்று நாட்களுக்கு முன் கொல்லப்பட்டார் என்றும் அவரது உடல் தாபாவின் குளிர்சாதன அறைக்குள் வைக்கப்பட்டது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி

திருமணம் செய்து கொள்வதில் தகராறு

கஹ்லோட், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார் என்றும் அதை அறிந்த அவரது காதலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகிறது. தங்கள் உறவைப் பற்றி கஹ்லோட்டின் பெற்றோரிடம் தெரிவிக்குமாறு அவரது காதலி கோரி இருக்கிறார் இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டையும் வந்திருக்கிறது. அப்படி ஒரு சண்டையின் போது, கஹ்லோட் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொன்று, அவரது உடலை தாபாவின் குளிர்சாதன அறையில் வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை இரவு நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.